
கோலாலம்பூர், ஜனவரி-21, பொது இடங்களில் ஒரு குத்து மதிப்பாக மக்களின் கைப்பேசிகளை போலீஸார் பரிசோதனை செய்ய மாட்டார்கள்.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கைப்பேசிகளைப் பரிசோதிக்கும் போலீஸாரின் அதிகாரம் குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், நியாயமான சந்தேகம் ஏற்படும் போது மட்டுமே அச்சோதனைகள் நிகழும் என்றார் அவர்.
அதாவது, ஒரு நபர் குற்றம் செய்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல், உளவுத்துறை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான சந்தேகம் எழும் போதே பரிசோதனை நடக்கும்.
வெறுமனே சாலையில் வருவோர் போவோரை நிறுத்தி கைப்பேசிகளை வாங்கி பரிசோதிக்க மாட்டோம் என IGP சொன்னார்.
அரசியலமைப்புச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே போலீஸார் நடந்துகொள்வர் என, பொது மக்களுக்கு அவர் உத்தரவாதம் அளித்தார்.
சட்ட அமுலாக்கமும் தனிமனித உரிமைக் காப்பும் சமச்சீராக இருந்தால் தான், போலீஸ் மீதான நம்பகத்தன்மையும் வலுப்பெறும் என தான் ஸ்ரீ ரசாருடன் கூறினார்.
விதிமீறல்களைத் தடுக்க, இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கும் மேலான பொறுப்புகளில் உள்ள போலீஸார் மட்டுமே கைப்பேசிகளை பரிசோதிக்க முடியுமென்பதையும் NST-யிடம் அவர் சுட்டிக் காட்டினார்.