
தாய்லாந்துடன் நடைபெறவுள்ள எல்லை மோதல் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையை, பாதுகாப்பு கருதி மலேசியா கோலாலம்பூரில் நடத்த வேண்டும் என்று கம்போடியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாதம் மீண்டும் தீவிரமடைந்த எல்லை மோதல்களில் தாய்லாந்தில் 23 பேரும், கம்போடியாவில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளிலும் சுமார் 900,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எல்லையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பான மற்றும் நடுநிலையான இடம் அவசியம் என கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியான் தலைமை நாடான மலேசியா, கோலாலம்பூரில் பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தாய்லாந்து விமானத் தாக்குதல் நடத்தியதாகவும், எல்லைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வரை மோதல் நீடித்ததாகவும் கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது.



