
கோலாலம்பூர், ஜனவரி 19 – ஏடிஎம் (ATM) இயந்திரத்திற்குள் சிக்கியிருந்த ஒரு பூனையை மீட்பதற்காக இயந்திரத்தின் உள்ளே நுழைந்த மலேசிய பாதுகாப்புப் படையான APM வீரர், சமூக வலைதள பயனர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றார்.
ஜனவரி 14 ஆம் தேதியன்று சமூக ஊடகத்தில் வெளியான காணொளியில், ஏடிஎம் இயந்திரத்தின் பக்கவாட்டு இடைவெளியில் ஒரு பூனை சிக்கியிருந்தது. வங்கிப் பணியாளர்கள் அப்பூனையை வெளியேற்ற முயன்றபோதும், அம்முயற்சி பலனளிக்கவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த APM வீரர்களில் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்திற்குள் தனது உடலின் பெரும்பகுதியை நுழைத்து பூனையை மீட்கும் பணியில் முழு மூச்சாய் ஈடுபட்டார். சிறிது நேரத்திலேயே அப்பூனை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
இந்நிலையில் வலைத்தளத்தில் வைரலான அந்த வீடியோ 120,000-திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள நிலையில், பலரும் தங்களது பாராட்டுகளைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
மலேசிய பாதுகாப்புப் படையான APM, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலிருந்து வேறுபட்ட ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பு தீ அணைப்பு பணிகளில் ஈடுபடாது என்றும் பொதுமக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதே இதன் முக்கியப் பணியாகும் என்றும் கூறப்படுகின்றது.



