
கோலாலாம்பூர், டிசம்பர்-24 – பல்லின – மதங்களைச் சேர்ந்த மலேசியர்களான நாம், ஒருவருக்கொருவர் மரியாதையும், அன்பும் செலுத்துவோம் என, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன், தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இவ்வாண்டு உலகின் பல பகுதிகளில் இன, மத மோதல்கள் நடந்ததைப் பார்க்கும்போது, இயேசுபிரானின் அன்பு சார்ந்த போதனைகள் இன்னும் நமக்குத் தேவை என்பதை உணர்கிறோம்.
எனவே, நமக்குள் நாம் மரியாதையும் அன்பும் செலுத்துவது அவசியம் என்றார் அவர்.
ம.இ.கா எப்போதும் அனைத்து இன, மத சகோதரர்களையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாட்டை கடைபிடித்துள்ளது.
இந்திய கிறிஸ்துவ சமூகத்தினருக்கு அரசாங்கத்திலும் கட்சியிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்நிலையில், கிறிஸ்மஸ் தினத்தை தேவாலயங்களில் பிரார்த்தனை செய்து, திறந்த இல்ல உபசரிப்புகள் மூலம் மற்ற இன சகோதரர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.



