
செராஸ், ஏப் 15 – உணவகத்தில் கிச்சாப் கோழியை எலி ருசி பார்க்கும் காணொளி ஒன்று நேற்று முதல் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவகத்தை தற்காலிகமாக சுகாதார அமைச்சு மூடியுள்ள நிலையில், நிகழ்ந்த தவற்றுக்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் அந்த உணவகத்தின் உரிமையாளர்.
செராஸ் பாண்டார் மக்கோட்டாவில் உள்ள A&R பிஸ்த்ரோ உணவகத்தின் உரிமையாளர் அஸ்மான் கான் வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் இந்த வருத்தம் தெரிவிப்பதாகவும்,
எத்தகைய விமர்சனங்களையும் ஏற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனது உணவகத்தில் வாரந்தோறும் பூச்சி கட்டுப்பாடு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும், இருந்தாலும் பழைய வடிகால் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அருகில் இருப்பதால், நீண்டகாலமாக எலி பிரச்சனைக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அந்த இடத்தின் முக்கியமான வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் எலிகளின் குடியிருப்பாக மாறி விட்டதாகவும், அதற்காக உள்ளாட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது அந்த உணவகம் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், விரைவில் மீண்டும் செயல்படும் என நம்பப்படுகிறது.