
கோலாலாம்பூர், டிசம்பர் 18-அரச மன்னிப்பு விண்ணப்பத்தில் கூடுதல் உத்தரவு இருப்பதாகக் கூறி டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடுத்த வழக்கில், தீர்ப்பு அவருக்குச் சாதமானால், அந்த முன்னாள் பிரதமர் உடனடியாக வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், நஜீப்பின் வழக்கறிஞர் தான் ஸ்ரீ ஷாஃபியி அப்துல்லா அதனை வலியுறுத்தியுள்ளார்.
நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென்ற கூடுதல் அரச உத்தரவு இருப்பதை நீதிமன்றம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டால், அவர் சிறையில் தொடருவது சட்டத்திற்கு புறம்பாக இருக்கும்.
எனவே, தீர்ப்பு வந்தக் கையோடு, எந்த தாமதமும் இல்லாமல் நஜீப் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதே முறையாக இருக்குமென ஷாஃப்பியி சொன்னார்.
நஜீப்பின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் இந்த நீதிமன்ற முடிவை எதிர்பார்த்து, அவரின் தீவிர ஆதரவாளர்கள் திங்கட் கிழமை புத்ராஜெயாவில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



