
புத்ராஜெயா, பிப்ரவரி-27 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பின் 4 முன்னாள் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணைக்கு உதவ 8 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரமும் அடுத்த வாரமும் அந்த 8 பேரும் அழைக்கப்பட்டிருப்பதை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
எனினும், அந்த 8 பேரில் இஸ்மாயில் சாப்ரியும், மற்ற முக்கியப் புள்ளிகளுடம் அடங்குவார்களா என்ற கேள்விக்கு, அசாம் பாக்கி பதிலளிக்க மறுத்து விட்டார்.
அதே சமயம் பணமோசடி தடுப்புப் பிரிவைச் சேர்ந்த குழு, கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
விசாரணை எப்போது நிறைவடையுமென்பதை இப்போது கூற முடியாது என்றார் அவர்.
எனினும் அவ்விசாரணையில் இஸ்மாயில் சாப்ரி நிச்சயமாக வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
வீட்டில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 65 வயது அந்த 9-ஆவது பிரதமரின் உடல் நிலையைப் பொறுத்து, பின்னர் அவர் அழைக்கப்படலாமென தெரிகிறது.
அதிகார முறைகேடு மற்றும் ஊழல் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட 4 முன்னாள் அதிகாரிகளும் பிப்ரவரி 25-ஆம் தேதி MACC-யால் கைதாகினர்.