
டெங்கில், ஜனவரி-24 – கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கம் தொடங்கி சோகோ பேரங்காடி வளாகம் வரை நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புப் பேரணியை, ஏற்பாட்டாளர்கள் தாராளமாகத் தொடரலாம்.
‘ஊழலை வெறுக்கும் மக்களின் பேரணி’ என்ற தலைப்பிலான அப்பேரணிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
“எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; தாராளமாக ஊழலை எதிர்த்து போராடுங்கள்” என சிலாங்கூர் டெங்கிலில் வெள்ளிக் கிழமைத் தொழுகைக்குப் பிறகு அவர் பேசினார்.
பிரதமராக தாம் பதவியேற்றுள்ள இந்த ஈராண்டுகளில் ஊழல் ஒழிப்பில் ஒற்றுமை அரசாங்கம் முனைப்புக் காட்டி வருவதை நாடே அறியுமென்றார் அவர்.
அப்பேரணிக்கு அனுமதி கோரி, ஏற்பாட்டாளர்கள் இன்னும் புதிய நோட்டீசை சமர்ப்பிக்கவில்லையென, இன்று காலை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா கூறியிருந்தார்.
அவர்கள் ஏற்கனவே சமர்ப்பித்த நோட்டீஸ் முழுமையாக இல்லையென்பதால், அதனைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு போலீஸ் கேட்டுக் கொண்டிருந்தது.
மெர்டேக்கா சதுக்கத்தில் அப்பேரணியை நடத்த DBKL-லிடமிருந்து அனுமதி வாங்கி விட்டதற்கான ஆதரமும் இல்லை என ருஸ்டி சுட்டிக் காட்டியிருந்தார்.