
ஜோகூர் பாரு, பிப் 5-கோத்தா திங்கியில் டி.பி எனப்படும் காசநோய் ஏற்பட்டிருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. பிப்ரவரி 4ஆம் தேதிவரை 804 நெருங்கிய தொடர்புகளில் இருந்து 33 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad ) தெரிவித்தார்.
தற்போது சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு பாதிக்கப்பட்ட இடத்தில் இருப்பதோடு தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
காச நோய்க்கான அறிகுறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற்றதோடு சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகளால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக Dzulkefly நேற்றிரவு X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒருவர் மரணம் அடைந்ததாக பதிவாகியுள்ள போதிலும் அதற்கு காச நோய் தொற்றின் காரணம் அல்ல என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சு தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதோடு காச நோயை கண்டறியும் செயல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீடித்த இருமல், காய்ச்சல் அல்லது இரவு நேரத்தில் வியர்வை போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் காச நோய்க்கு உள்ளான பகுதியில் வசித்தால் உடனடியாக சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், நிலைமை மிகவும் மோசமாகும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.



