
கோலாலம்பூர், பிப்ரவரி-25 – நாட்டில் பதின்ம வயது ஆண்களை விட பதின்ம வயது பெண்களுக்கு, மனச்சோர்வு உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளை அனுபவிக்கும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாகும்.
2022-ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பில் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நொராய்னி அஹ்மாட் தெரிவித்தார்.
26.9 விழுக்காட்டு பதின்ம வயதினர் மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களுக்கு அது ஏற்படும் வாய்ப்பு 17.7 விழுக்காடாக உள்ள நிலையில், பதின்ம வயது பெண்களில் 36.1 விழுக்காட்டினருக்கு அதற்கான வாய்ப்புகள் இருப்பதை அவ்வறிக்கைக் காட்டுகிறது.
இது தற்கால பெண்களிடையே நிலவும் சவாலை வெளிப்படுத்துவதாக, ஜோகூர் பாருவில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான 2025 அனைத்துலக மகளிர் தின கொண்டாட்டத்தில் அவர் கூறினார்.
அக்கொண்டாட்டத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட “மனத்திடம், ஆரோக்கியமான பெண்கள்” பிரச்சாரம், பெண்களிடையே உணர்ச்சி ரீதியான மீள்தன்மை மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சமநிலையான வாழ்க்கையை அடைதல் உட்பட பெண்களின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை செயல்படுத்துவதில் தமதமைச்சு உறுதியாக உள்ளதாகவும் நொராய்னி தெரிவித்தார்.
அனைத்து பெண்களும் தேவையான உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, உளவியல் சமூக ஆதரவு திட்டங்கள், ஆலோசனை சேவைகள் மற்றும் மனநல முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.