
புத்ராஜெயா, ஜூலை-3 – சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையின் எலும்பியல் நிபுணத்துவ கிளினிக்கில் ஜூன் 30-ஆம் தேதி ஏற்பட்ட நெரிசல் குறித்து, சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அச்சம்பவம், புகைப்படம் மற்றும் வீடியோ வாயிலாக வைரலாகி பொது மக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளதே அதற்குக் காரணம்.
இந்நிலையில், சம்பவத்தன்று 158 நோயாளிகள் கிளினிக் வந்த நிலையில், அட்டவணை மற்றும் இருக்கும் ஆள்பலத்தின் அடிப்படையில் 3 மருத்துவ நிபுணர்களும், 3 மருத்துவ அதிகாரிகளும் பணியில் இருந்தனர்.
மாறாக வைரலானது போல் 300 நோயாளிகள் அல்ல என KKM தெளிவுப்படுத்தியது.
300-க்கும் மேற்பட்டவர்கள் ஒருவேளை நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது பாதுகாவலர்களை உட்படுத்தியிருக்கலாம் என அது கூறியது.
எது எப்படி இருப்பினும் அரசாங்க மருத்துவமனைகளில் காத்திருக்கும் நேரம் தொடர்பில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தார், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் அசௌகரியங்களை புரிந்துகொள்ள முடிகிறது.
அதே சமயம் சுங்கை பூலோ போன்ற முக்கிய மருத்துவமனைகளின் சுமை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்; என்றாலும் சேவையளிப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம் என அமைச்சு உறுதியளித்தது.
முன்னதாக, அந்த கிளினிக்கில் சிகிச்சைக்காக மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்ததாக, பொது மக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தது வைரலானது.