சிங்கப்பூரில் தனக்குத் தானே போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வெளியிட்ட மருத்துவருக்கு 3 வருட இடைநீக்கம்

சிங்கப்பூர், செப்டம்பர்-11 – சிங்கப்பூர் பெரிய மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, தான் வேலைக்கு வராததை மறைப்பதற்காக MC எனப்படும் இரண்டு மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களைத் போலியாகத் தயாரித்ததற்காக, ஒரு பெண் மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Dr Cherida Yong Chun Yin-னின் இடைநீக்கம் கடந்த செப்டம்பர் 3 முதல் 2028 செப்டம்பர் 2 வரை 3 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு அவர் இரண்டு முறை தானே போலி MC தயாரித்து விடுப்பு எடுத்தார்.
ஜூலை 1 மற்றும் செப்டம்பர் 12 தேதிகளுக்கான சான்றிதழ்களை மற்றொரு கிளினிக் வழங்கியதாக ஆதாரம் காட்டினார்.
ஆனால், விசாரணையில் அவர் அங்கே சென்றதே இல்லை என்பது தெரியவந்தது.
தொடக்கத்தில் குற்றத்தை மறுத்த அவர் பின்னர் தனிப்பட்ட மன அழுத்தத்தால் அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் சிங்கப்பூர் மருத்துவ மன்றமோ, இது முன்கூட்டியே திட்டமிட்டு செய்தது என்றும், மருத்துவ நெறிமுறை மீறல் என்றும் கூறி, அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
இடைநீக்கத்தோடு, அபராதம் கட்டவும் எழுத்துப்பூர்வ உறுதிமொழி வழங்கவும் அம்மாது உத்தரவிடப்பட்டார்.