சூடான் ராணுவ விமானம் வீடமைப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது; 46 பேர் மரணம்

போர்ட் சூடான், பிப் 27 – சூடான் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று Khartoum புறநகர் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழந்தனர்.
சூடானின் மிகப் பெரிய ராணுவ தளத்திற்கு அருகே அந்த Antonov விமானம் செவ்வாய்க்கிழமையன்று இரவில் விபத்திற்குள்ளானது என வட்டார அரசாங்கம் அறிவித்தது.
அந்த விமானம் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்களில் சிலரும் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் இதர 10 பேர் காயம் அடைந்ததாக கூறப்பட்டது.
இதற்கு முன் அந்த விபத்தில் 19 பேர் இறந்தாக ராணுவம் ஆதரவைக் கொண்ட சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
திடீரென மிகப் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதோடு பல வீடுகளும் சேதம் அடைந்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
அந்த விமான விபத்திற்கு தொழிற்நுட்ப கோளாறே காரணம் என ராணுவ தகவல்கள் தெரிவித்தன.
ரஷ்யாவில் தயாரிக்கப்ப்டட Ilyushin விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு தாங்கள் பொறுப்பேற்பதாக ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் துணை ராணுவ ஆதரவு படைகள் கூறிக்கொண்ட ஒரு நாளுக்கு பிறகு இந்த விபத்து நடந்துள்ளது.