
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-23,
பட்டர்வொர்த்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் பின்னால் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் காப்புறுதி முகவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
24 முதல் 42 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் பட்டர்வொர்த் மற்றும் பேராக்கின் கம்பார் ஆகிய இடங்களில் கைதாகியதாக, பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் தெரிவித்தார்.
கொலை குற்றத்திற்கான 302-ஆவது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அக்டோபர் 9-ஆம் தேதி பிற்பகல் 1.45 மணியளவில், ஜாலான் பெர்மாத்தாங் பாவ் சாலையில் அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி பின்னால் உள்ள சூட்கேஸைக் கண்டு, பொது மக்கள் அவசர எண்களை அழைத்து தகவல் தெரிவித்தபோது, இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
போலீஸார் சோதனை செய்தபோது, இறந்தவரின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததோடு, கழுத்து வெட்டப்பட்டிருந்தது… கைகள் கட்டப்பட்டிருந்தன, தலை பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டிருந்தது.
கொல்லப்பட்டவர் உள்ளூர்வாசி என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது.
அவர் வீடு திரும்பாததால், இறப்பதற்கு ஒரு நாள் முன்பு காணாமல் போனதாகக் கூறி அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
கடந்த வாரம், இறந்தவரின் வாகனத்தைக் கண்டுபிடித்த ஒருவர், உடலைக் கண்டுபிடித்த நபர் மற்றும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர் என 3 பேரிடமிருந்து போலீஸார் வாக்குமூலங்களைப் பதிவுச் செய்தனர்.