
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-1 – தலைநகர் சௌகிட்டில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் கூடாரமாக விளங்கிய spa புத்துணர்ச்சி மையத்தில் 202 பேர் மொத்தமாக கைதான சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அதே போன்றதொரு கைது பினாங்கு பிறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிறை ஜெயா பகுதியில் உள்ள ஒரு spa & sauna மையத்தில் ‘ஒழுங்கீனச் செயல்கள்’ நடப்பதாக தகவல் கிடைத்து போலீஸ் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சோதனை நடத்தியது.
2 மாதங்களாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் அம்மையத்தில் 11 பேர் கைதாகினர்; பதின்ம வயது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அவர்களில் அடங்குவர்.
11 பேரில் 9 பேர் மலேசிய வாடிக்கையாளர்கள், இருவர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
தவிர, 57 மற்றும் 59 வயதான இரு பணியாளர்களும் கைதாகினர்.
சோதனையில் ஆணுறைகள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களின் கைப்பேசிகளில் ஆபாச வீடியோக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இச்சம்பவம், ஓரினச் சேர்க்கைக் குற்றங்களுக்கான 377B, 292 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் முறையான ஆவணங்கள் இல்லாத 2 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
இவ்விரு சம்பவங்களையும் தொடர்ந்து, புத்துணர்ச்சி மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வரும் மேலும் ஏராளமான ஓரினச் சேர்க்கை கூடாரங்கள் வெளிச்சத்துக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.



