ஜப்பானில் டிரக் லாரியை விழுங்கிய திடீர் பள்ளம்; 74 வயது ஓட்டுநரை மீட்க 1.2 மில்லியன் நகரவாசிகளின் ஒத்துழைப்பை நாடும் மீட்புக் குழு

யாஷியோ, ஜனவரி-31, ஜப்பானின் யாஷியோ நகரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பெரிய டிரக் லாரியே விழுந்துள்ளது.
பாதி லாரியை வெளியே எடுத்து விட்ட போதிலும், அதன் 74 வயது ஓட்டுநர் இன்னமும் பள்ளத்தினுள் சிக்கியுள்ளார்.
அவரைத் தேடும் பணிகள் மூன்றாவது இரவைத் தாண்டியுள்ள நிலையில், அவருடன் உயிருடன் வருவார் என்ற நம்பிக்கை மெல்ல மங்கி வருகிறது.
செவ்வாய்க் கிழமை மதியம் 1 மணியிலிருந்து அவருடன் தொடர்பில்லை என்பதே அதற்குக் காரணம்.
செவ்வாய்க்கிழமை காலை நெரிசல் நேரத்தில், தோக்யோவுக்கு வடக்கே சுமார் 30 நிமிட பயண தூரத்தில் உள்ள யாஷியோ நகரில் உள்ள ஒரு சாலை சந்திப்பில் நிலம் அமிழ்ந்து, அந்த டிரக் லாரியை விழுங்கியது.
தொடக்கத்தில் சுமார் 10 மீட்டர் அகலமும் ஆறு மீட்டர் ஆழமும் கொண்டதாக இருந்த அந்த திடீர் பள்ளம், பின்னர் அருகில் ஏற்பட்ட மற்றொரு பள்ளத்தோடு இணைந்து விரிவடைந்து விட்டது.
பள்ளத்தைச் சுற்றிலும் நில அமைப்பு நிலையற்றதாக இருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன; போதாக்குறைக்கு தண்ணீரும் உள்ளே புகுந்து விட்டது.
இந்நிலையில் அம்முதியவரை மீட்கும் பணிகள் மேலும் தடைபடாதிருக்க, உள்ளூர்வாசிகள் நீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பள்ளத்தில் கழிவுநீர் கசிவு ஏற்படுவதைத் தடுக்க, குளித்தல் மற்றும் துணி துவைத்தலுக்கான தண்ணீரை இயன்றவரைக் குறைக்குமாறு ஜப்பானிய அதிகாரிகள் 1.2 மில்லியன் யாஷியோ மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அப்பகுதியில் குறிப்பிட்ட அளவு கழிவு நீர் சேகரிக்கப்பட்டு பக்கத்திலுள்ள ஆற்றில் விடப்பட்டுள்ளது.
கடினமே என்றாலும், யாஷியோ மக்களின் ஒத்துழைப்புடன் டிரக் ஓட்டுநரை எப்படியாவது மீட்டு விட மீட்புக் குழுவினர் இரவு பகலாக போராடி வருகின்றனர்.