
சென்னை, ஜூலை-28- ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்குத் தமிழகத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இருவருமே பாரதத்தின் (இந்தியா) அடையாளங்கள்; எனவே அந்த உருவச் சிலைகள் நமது வரலாற்றின் கொடிமரங்களாகத் திகழும் என மோடி வருணித்தார்.
அரியலூரில், கங்கைக் கொண்ட சோழபுரத்தின் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது.
ராஜேந்திர சோழனின் 1,005-ஆது பிறந்தநாள் விழா, கங்கைக் கொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு விழா என அந்த முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
நேற்று இதன் நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய போது மோடி அவ்வாறு சொன்னார். மாலத்தீவு, இலங்கை மற்றும் தென்கிழக்காசியா வரை விரிவடைந்தது சோழப் பேரரசு.
பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று சோழ சாம்ராஜ்யம்; ஜனநாயகத்தின் முன்னோடிகளும் சோழர்களே என மோடி புகழாரம் சூட்டினார்.
விழாவில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் நினைவு நாணயத்தையும் மோடி வெளியிட்டார். இசைஞானி இளையராஜாவின் கச்சேரியையும் மோடி மெய்மறந்து கண்டு இரசித்தார்.