
பங்சார், அக் 29 – சிலாங்கூர் தோட்டங்களில் குடியிருந்து வீட்டுடைமை பிரச்சனையில் சிக்கிய இந்தியர்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தர ஏதுவாக 75 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் அத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்தாண்டு பொங்கல் விழாவின் போது நடக்கவிருப்பதாக வீடமைப்பு ஊராற்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
20 ஏக்கர் நிலத்தில் 245 வீடுகள் ஈராண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு மத்திய அரசாங்கம் 40 மில்லியன் ரிங்கிட்டும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் 35 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கிய நிலையில், பெர்ஜாயா நிறுவனம் 20 ஏக்கர் நிலமும் வழங்கியதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
கடந்த கோலா குபு பாரு இடைத்தேர்தல் போது சிலாங்கூரில் 6 தோட்டங்களில் நிலவுகின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடமைப்பு பிரச்சனைகளைத் தீர்க்க அரசாங்கம் 75 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றும் விதமாக இந்த PRR ஹர்மோனி மடானி எனப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கான நகர திட்டமிடல் ஒப்புதலும் கிடைத்திருப்பதாக இன்று தமிழ் ஊடகங்களுடனான தீபாவளி சந்திப்பின் போது அவர் இந்த விவரங்களை கூறினார்.
இவ்வேளையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ ஹமிருடின் ஷாரி அவர்களுக்கும் பெர்ஜாயா நிறுவனத்திற்கும் ங்கா கோர் மிங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.