
கோலாலம்பூர், செப்டம்பர்-8 – நேரலைகளில் ஆபாசமான அல்லது தீங்கிழைக்கும் கருத்துகளை வடிகட்டும் தமிழ் moderators-களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விஷயத்தில் டிக் டோக் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், அச்செயலியை இந்நாட்டில் தடைச் செய்ய வேண்டியது தான் என, டத்தோ என் சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
AI அதிநவீனத் தொழில்நுட்பம் வந்து விட்ட இந்தக் காலக்கட்டத்தில் இதுவொன்றும் தீர்க்க முடியாத பிரச்னை அல்ல என, DSK எனப்படும் Dinamik Sinar Kasih Malaysia சமூக நல அமைப்பின் தலைவரான அவர் சொன்னார்.
எந்த மொழியாயினும், AI உதவியுடன், ஆபாச அல்லது தீங்கிழைக்கும் கருத்துகளை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான வழிவகைகளை சமூக ஊடக சேவை வழங்குநர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மாறாக, சாக்குபோக்கு கூறக்கூடாது என்றார் அவர்.
கடந்தாண்டு சமூக ஊடகப் பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்ரி அப்பாவு இணையப் பகடிவதைக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்ட போதே, இது குறித்து தாம் பேசியிருந்ததை சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
மக்களின் பாதுகாப்புக் கருதி ஏராளமான நாடுகள் டிக் டோக் பயன்பாட்டை தடைச் செய்துள்ளன; அப்பட்டியலில் மலேசியாவும் சேர்ந்து விடக் கூடாது என்றால், டிக் டோக் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என அவர் கூறினார்.
தமிழ் moderators விஷயத்தில் டிக் டோக் மெத்தனமாக செயல்படுவது தமக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இந்தியச் சமூகத்தை உட்படுத்திய இணைய பகடிவதைகள் குறித்து தொடர்ந்து புகார்கள் கிடைத்து வருகிறது; எனவே டிக் டோக் தன் போக்கை மாற்றிக் கொண்டு நடவடிக்கையில் இறங்காத பட்சத்தில் அதன் மீது சட்ட நடவடிக்கைப் பாயும் என்றும் ஃபாஹ்மி எச்சரித்தார்.