
கோலாலம்பூர், டிசம்பர் 21-தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘தளபதி திருவிழா’ இசைநிகழ்ச்சி குறித்து, போலீஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழங்கப்பட்ட அனுமதியானது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக மட்டுமே…மாறாக அரசியல் மேடையாக மாறுவதற்கு அல்ல.
எனவே, அரசியல் பேச்சுகள், கோஷங்கள், சின்னங்கள், அல்லது அரசியல் செய்தியின் நேரலை ஒருபோதும் அனுமதிக்கப்படாது என, செராஸ் போலீஸ் தலைவர் Aidil Bolhassan கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஏதேனும் அரசியல் அம்சங்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
முன்னணி நடிகராக இருந்து முழு நேர அரசியல்வாதியாகவுள்ள பிரபல நடிகர் விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா தான், ‘தளபதி திருவிழா’ என பிரமாண்டமாக நடைபெறுகிறது.
2026-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் குறிக்கோளுடன் த.வெ.க எனப்படும் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி விஜய் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதன் மூலம் சினிமாவை விட்டு விலகும் விஜய்க்கு பிரியாவிடை வழங்கும் வகையில் இந்த பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஆர்வக் கோளாறில் இதனை அரசியல் மேடையாக மாற்றி விட வேண்டாமென, ஏற்பாட்டாளர்கள், இரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போலீஸ் நினைவுறுத்தியுள்ளது.
விஜயின் மலேசிய இரசிகர்கள் சிலர், த.வெ.க கட்சிக் கொடியை ஏந்தியும், கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட சட்டைகள் அல்லது சால்வைகளை அணிந்தும் சமூக ஊடகங்களில் பதிவுகளை ஏற்றியதை முன்னதாகக் காண முடிந்தது.
வெளிநாட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மலேசியர்களுக்கு ஒரு பொதுவான தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.



