பாயன் லெப்பாஸ், அக் 22 – கட்டுமான பகுதியிலுள்ள கட்டிடத்தின் 8ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் மரணம் அடைந்தார். நேற்றிரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் கடுமையாக காயம் அடைந்த அந்த தொழிலாளி விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான தகவலை பெற்றவுடன் பினாங்கு வேலையிட பாதுகாப்பு மறறும் சுகாதாரத்துறையின் அதிகாரிகள் குழு ஒன்று சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதாக அத்துறையின் அதிகாரி தெரிவித்தார்.
குத்தகை தொழிலாளியான அந்த நபர் கட்டுமான பகுதியில் வர்ணம் பூசுவது மற்றும் சிமெண்ட் பிளாஸ்டார் பூசும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தார். எட்டாவது மாடியிலுள்ள தற்காலிகமாக வெளியேறும் பகுதியிலிருந்து குதித்தபோது அந்த தொழிலாளி கீழே விழுந்ததாக கூறப்பட்டது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முழுமையடையும்வரை கட்டுமான பகுதியில் உயரான பகுதிக்கு செல்லும் வழியை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தும்படி பணிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு வேலையிட பாதுகாப்பு சுகாதாரத்துறையின் அதிகாரி தெரிவித்தார். மேலும் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி , அறிக்கை ஒனன்றை வழங்கும்படியும் கட்டுமான நிர்வாகத்திற்கு பணிக்கப்பட்டுள்ளது.