ஜார்ஜ்டவுன், நவ 11 – பினாங்கில் புதன்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கையின் மூலம் ஐந்து ஆடவர்களை கைது செய்த போலீசார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
பரவச மாத்திரை பவுடர்கள், ஷாபு மற்றும் கெத்தமின் போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் துடைத்தொழிப்பு குற்ற விசாரணை பிரிவின் இயக்குனர் டத்தோஸ்ரீ
காவ் கொக் சின் (khaw Kok Chin ) தெரிவித்தார்.
தஞ்சோங் பூங்கா , ஜாலான் லெம்பா பந்தாயிலுள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனையில் 32 மற்றும் 54 வயதுடைய மூன்று சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.
அந்த வீடு போதைப் பொருள் தயாரிப்பு கூடமாக பயன்படுத்தப்பட்டு வந்ததோடு பல்வேறு போதைப் பொருள்கள், ரசாயனம் மற்றும் தடைசெய்யப்பட்ட சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தவிர Toyota Hilux வாகனங்கள், Hyundai Accent கார்களும் கைப்பற்றப்பட்டன.
அந்த ஐவரும் போதைப் பொருள் தயாரிப்பதற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை பயன்படுத்தி வந்ததும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அந்த ஐந்து நண்பர்களும் கோலாலம்பூரிலுள்ள போதைப் பொருள் விநியோக கும்பலுக்கு போதைப் பொருளை விநியோகித்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் அந்த கும்பலை முறியடித்த போலீசார் 21 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.