
புத்ராஜெயா, அக்டோபர்-24, புறநகர் மக்களின் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள செஜாத்தி மடானி (SejaTi MADANI) சமூக வளப்பத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு, இந்தியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புறநகர் பகுதி மக்கள் தங்களின் பொருளாதார நடவடிக்கைகளையும் திட்டங்களையும் முன்னெடுக்க, இந்த செஜாத்தி மடானி திட்டத்தின் வாயிலாக நிதியுதவியைப் பெறலாம்.
தகுதிப் பெற்ற அனைத்து சமூக அமைப்புகளும் அதற்கு விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பம் இலவசமாகும்.
இதுவரை 25 சமூக அமைப்புகள் விண்ணப்பித்ததில், 9 அமைப்புகளுக்கு இந்த செஜாத்தி மடானி திட்டத்தின் வாயிலாக மொத்தமாக 544,000 ரிங்கிட் நிதி அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மடானி விவேக விவசாய கிராமத் திட்டத்தை முன்னெடுத்த பெர்லிஸ் செனா சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த கம்போங் இந்தியாவுக்கு 100,000 லட்சம் ரிங்கிட்டும், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளைக் கொண்டு பலகைகளையும் தூண்களையும் தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெர்லிஸ் மாநில இந்தியர் கிராம MPKK-வுக்கு 100,000 லட்சம் ரிங்கிட்டும் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வதற்கு முன், வழிகாட்டிகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு பிரதமர் துறையின் செஜாத்தி மடானி செயலகத்தை 03-8872 3888/ 6430/ 6406/ 6401 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த செஜாத்தி மடானி திட்டத்தை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.