
கோலாலம்பூர், டிசம்பர்-13, பெர்சாத்து கட்சிப் பணத்தை கையாடல் செய்து வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட் தம் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை, தான் ஸ்ரீ முஹிடின் யாசின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும், பொறுப்பற்ற யாரோ வேண்டுமென்றே மகாதீரைத் தவறாக வழிநடத்தியிருப்பதாகவும், அறிக்கையொன்றில் அவர் சொன்னார்.
பெர்சாத்து நிதி அனைத்தும் அதிகாரப்பூர்வ கணக்கில் செலுத்தப்பட்டு, அதனை கட்சிப் பொருளாளர் பொறுப்புடன் நிர்வகிப்பதாகவும் முஹிடின் கூறினார்.
மகாதீருடன் நடந்த பல சந்திப்புகளில் இந்த விஷயம் ஒருபோதும் பேசப்படவில்லை எனவும், பேசுவதற்கு முன் தம்மிடம் அதுபற்றி முதலிலேயே அவர் கேட்டிருக்கலாம் என்றும் முஹிடின் தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படாமலிருக்க, உண்மையை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தன் மீது மகாதீர் ‘அவதூறு’ பரப்பினாலும் அப்பெருந்தலைவர் மீது தாம் வைத்துள்ள மரியாதை சற்றும் குறையவில்லை என்றும், எனவே அவர் மீது வழக்குத் தொடுக்கும் எண்ணம் இல்லையென்றும் முஹிடின் தெளிவுப்படுத்தினார்.
முன்னதாக வைரலான வீடியோவில், முஹிடின் கட்சிப் பணத்தைத் திருடியிருப்பதாகவும், மாட்டிக் கொள்வதிலிருந்து தப்பிக்கவே மீண்டும் பிரதமராக அவர் துடிப்பதாகவும் மகாதீர் கூறியிருந்தார்.
ஜோகூர் பெர்சாத்து இளைஞர் பிரிவுடனனான சந்திப்பில் மகாதீர் அவ்வாறு கூறியதாகத் தெரிய வருகிறது.
எனினும் 2 நிமிட அந்த வீடியோ, குறிப்பிட்ட யாரோ சிலரால் தவறான நோக்கத்துடன் எடிட் செய்யப்பட்டிருப்பதாக அந்த இளைஞர் பிரிவு கூறிக் கொண்டது.



