
கோலாலம்பூர், ஜனவரி 29 – மலேசிய ராணுவத்தின் முன்னாள் பாதுகாப்பு உளவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Mohd Razali Alias, லஞ்ச ஊழல் வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
20,000 அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதோடு மட்டுமல்லாமல் தனது மனைவிக்காக வெளிநாட்டு விமான டிக்கெட்டுகளின் தொகையைப் பெற்றுக் கொண்டதற்காகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பத்திரிக்கையின்படி, 2024 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை, பாதுகாப்பு சைபர் செயல்பாட்டு மையம் தொடர்பான சேவைகளுக்கான கட்டண அனுமதி வழங்குவதற்காக, ஒரு நபரிடமிருந்து அவர் 20,000 அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், அதே நபரிடமிருந்து தனது மனைவிக்காக, ஸ்பெயின் மற்றும் Estonia செல்லும் விமான பயண டிக்கெட்டுகளுக்கான 26,800 ரிங்கிட் மற்றும் 37,800 ரிங்கிட் ஆகிய தொகைகளை பெற்றதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், நீதிமன்றம் 50,000 ரிங்கிட் ஜாமீனை விதித்ததோடு மட்டுமல்லாமல் அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



