
கிள்ளான், ஜூலை-26 – கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் 36-ஆவது தமிழ் விழா அண்மையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
கிள்ளான், தெப்பி சுங்கை ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மண்டபத்தில் நடைபெற்ற
இவ்விழாவானது, கோவிட்-19 காலக்கட்டத்திற்குப் பிறகு 5 ஆண்டுகள் இடைவெளியில் நடக்கும் முதல் தமிழ் விழாவாகும்.
தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தலைவர் பொன்னுசாமி ஏழுமலை, இந்த 2025 தமிழ் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இம்முறை 2025 பரதநாட்டியப் போட்டியும் உடன் நடத்தப்பட்டது.
தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் அறங்காவலர் டத்தோ மேஜர் எம்.எஸ்.மூர்த்தி மற்றும் கிள்ளான், தெப்பி சுங்கை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தில் இப்போட்டியின் ஆதரவாளராக இருந்தனர்.
நடனப் போட்டி 13 வயதுக்குட்பட்டவர்கள் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது; மலேசியாவில் உள்ள அனைத்து நடனப் பள்ளிகளிலிருந்தும் நடனமனிகள் இதில் கலந்துகொண்டனர்.
இரு நாட்களும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
13 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் விஹாரா நடனப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஷஸ்மிதா நாயர் வெற்றிப் பெற்றார்; அவருக்கு மலேசியாவுக்கான இந்தியத் தூதரக சுழற்கிண்ணமும், 1,500 ரிங்கிட் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
14 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தக்ஷரா ஃபைன் ஆர்ட்ஸ் நடனப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சூ சன் யாப் வாகை சூடினார்; அவருக்கும் சுழற்கிண்ணமும் 2,000 ரிங்கிட் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
இரு பிரிவுகளிலும் இரண்டாம் மூன்றாம் இடங்களை வென்றவர்களுக்கு முறையே 1,000 ரிங்கிட்டும், 500 ரிங்கிட்டும் வழங்கப்பட்டதாக, கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் பூவராசன் சிதம்பரநாதன் தெரிவித்தார்.
பரதநாட்டியப் போட்டியையும், ஆண்டு விழாவான தமிழ் விழாவையும் காண சுமார் 200 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.