
பாங்கி, மார்ச் 7 – சுயநலத்திற்காக சமய விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாமென அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
இத்தகைய நடைமுறைகள் நிறுத்தப்படாவிட்டால், இனப் பிளவுக்கு வழிவகுக்கும் என்று நிதி அமைச்சருமான அன்வார் வலியுறுத்தினார்.
இது தொடர்ந்தால் அது மக்களை எரித்து அழித்துவிடும். எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. நம் நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, மக்களையும் சமயத்தையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அன்வார் நினைவுறுத்தினார்.
சமயத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் ஒரு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என Masjid Teras Jernangகில் வெள்ளிகிழமை தொழுகையில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் தெரிவித்தார்.
சமயம் தொடர்பான எந்தவொரு கருத்தும் சரியான தளத்தின் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதோடு ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க வேண்டும்.
இது ரமலான் மாதம், புனித வெள்ளி. இதை யார் மீறினாலும், அவர்கள் சட்டத்தை எதிர்நோக்க வேண்டும் என அன்வார் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் இந்த புனித ரமலான் மாதத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சமயத்தை யார் இழிவுபடுத்தினாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .
இந்நாட்டில் உள்ள பல இன மற்றும் பல்வேறு சமயங்களையும் சேர்ந்த மக்களுக்கிடையில் இருந்துவரும் நல்லிணக்கமும் பிளவுபட்டுவிடக்கூடாது. இஸ்லாம் என்பது நாம் மதிக்கும் கூட்டாட்சி சமயம், ஆனால் அதே சமயம் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று அன்வார் நினைவுறுத்தினார்.