
கோலாலம்பூர், ஜனவரி-20 – பஹாங், ரவூப், தெர்சாங் தேசியப் பள்ளியில் மலாய் ஆசிரியைக்கும் 12 வயது இந்திய மாணவனுக்கும் இடையிலான பிரியாவிடை, மலேசியர்களை மனம் நெகிழச் செய்துள்ளது.
இருவரும் வெவ்வேறு பின்னணிகள் மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் வெளிப்படுத்திய வலுவான பிணைப்பை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டியுள்ளனர்.
பள்ளியில் நடந்த பிரியாவிடை விருந்தின் போது அவ்வீடியோ பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
வேறொரு பள்ளிக்கு மாற்றலாகிச் செல்லும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியருக்கும், தொடக்கப்பள்ளியில் இறுதியாண்டை முடிக்கும் 6 ஆம் வகுப்பு மாணவனுக்கும் இடையிலான உணர்ச்சிப் பரிமாற்றத்தை அதில் காண முடிகிறது.
அம்மாணவன், ஆசிரியையின் வழிகாட்டுதலுக்கு தழுதழுத்தக் குரலில் நன்றித் தெரிவிப்பதையும் காணலாம்.
டிக் டோக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அவ்வீடியோவுக்கு இதுவரை 350,000 views-களும், 29,000 likes-களும் கிடைத்துள்ளது.
தவிர, 1,200-க்கும் மேற்பட்டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பலர், வீடியோவைப் பார்த்து நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டதாகவும் கூறினர்.
ரவூப்பில் உள்ள சிறியப் பள்ளியாக இந்த SK Tersang 3 பள்ளியில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் பொதுவாகவே நெருக்கமானப் பிணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.