
கோலாலம்பூர், ஜூலை 9 – மலேசியாவிற்கு ஒரு வழி விமானத்தில் ரகசியமாக ஏறிய 17 வயது பிரிட்டிஷ் மாணவன் காணாமல் போனதால் அவனது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, பதில்களுக்காக ஏங்கித் தவிக்கின்றனர்.
கிரேட்டர் மான்செஸ்டரின் சீடில் ( Cheadle ) பகுதியைச் சேர்ந்த A Level கல்வி பயிலும் மாணவர் டேவிட் பாலிசோங் ( David Balisong ) ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி, பள்ளி விவகாரங்களை சமாளிக்க வேண்டியிருப்பதாக தனது சகோதரரிடம் கூறிவிட்டுச் சென்றதாக
The Daily Mail தகவல் வெளியிட்டுள்ளது.
மாறாக, அம்மாணவன் மான்செஸ்டரிலிருந்து கோலாலம்பூருக்கு தனியாக பயணம் செய்ததோடு பின்னர் தனது கைதொலைபேசியை அணைத்துவிட்டார். மேலும் மின்னஞ்சல்களுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
பிலிப்பைன்ஸ் பெற்றோர்களுக்கு பிரிட்டனில் பிறந்த டேவிட்டிற்கு மலேசியாவில் எவரும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை .
1,200 Pounds வங்கிக் கணக்குடன் புறப்பட்ட அவருக்கு வந்துச் சேர்ந்தவுடன் 90 நாள் விசாவும் வழங்கப்பட்டிருந்தது.
டேவிட் தனது ஏ-லெவல் படிப்பின் மத்தியில் இருந்து வந்ததோடு நாசாவில் பணிபுரியும் கனவுகளுடன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கும் திட்டத்தை கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.
அவரது தாயாரான 50 வயது மினெர்வா ( Minerva ) தீவிர சிகிச்சை தாதியாக இருந்துவருகிறார். டேவிட்டைத் தேட மலேசியாவிற்கான தங்கள் பயணத்திற்கு பாலிசோங் ( Balisong ) குடும்பத்தினர் நன்கொடை இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.