
புத்ராஜெயா, டிசம்பர் 23-டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அனைவரும் மதிக்க வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
வெளியாரின் தலையீட்டிலிருந்து நீதி பரிபாலனத் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற கொள்கையை மடானி அரசு கட்டிக் காக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தை பொறுமையுடன், அறிவுடன் அணுக வேண்டும் என்றும், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளில் மேல்முறையீடு மற்றும் மாமன்னரின் பரிந்துரைக்கு இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தம்மை வீட்டுக் காவலில் வைக்க கூடுதல் அரச உத்தரவு இருப்பதாகவும், எனவே அதனை அமுல்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டுமென்றும் கோரி, நஜீப் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
எனினும், அரச மன்னிப்பு வாரியத்திற்கு வெளியே நிகழ்ந்த எதுவும் சட்டப்பூர்வமாகக் கருதப்படாது என்ற அடிப்படையில், அவ்விண்ணப்பத்தை கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
இதையடுத்து, ஏற்கனவே ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நஜீப் காஜாங் சிறையில் கழிக்க வேண்டியுள்ளது.



