
சென்னை, ஜூலை-14- கேரளாவில் அண்மையில் வெளியான ஒரு மலையாளப் படத்தில் இடம் பெற்ற காட்சிகளைப் பின்பற்றி, தமிழகப் பள்ளிகளிலும் விரைவில் ‘ப’ வரிசை இருக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சு அதனை உறுதிப்படுத்தியது. ‘Sthanarthi Sreekuttan’ என்ற அம்மலையாளப் படத்தில், பள்ளிகளில் முதல் இருக்கை, கடைசி இருக்கை என்ற ‘பாகுபாட்டைத்’ தவிர்க்க, ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இரசிகர்களிடம் இதற்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது. இது நல்ல யோசனையாக உள்ளதே என்றெண்ணி, கேரளாவில் பல பள்ளிகள், ஒன்றன் பின் ஒன்றாக வழக்கமான முறையில் இருக்கைகளை அமைப்பதற்கு பதிலாக, ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைத்து வருகின்றன.
தற்போது தமிழக அரசும் இந்த ‘ப’ வடிவ இருக்கை அமைப்பு முறையை விரைவிலேயே அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
என்றாலும், 30, 35 மாணவர்களுக்கும் மேல் உள்ள வகுப்பறைகளில் இந்த ‘ப’ வடிவ இருக்கை அமைப்பு சாத்திமில்லாத ஒன்று என பரவலாகக் புகார்கள் எழுந்துள்ளன.
இதனைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, தொடக்கமாக 8,000 அரசு இடைநிலைப் பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் இது அமுலுக்கு வருமென அறிவித்துள்ளது.
இது முழுமையாக அமுலுக்கு வரும் போது, மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் இருக்கை அமைப்பு முறை இருப்பது உறுதிச் செய்யப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.