
வாஷிங்டன், அக்டோபர்-10,
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் முன்வைத்த காசா போர்நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு திட்டத்தை இஸ்ரேல் ஒருவழியாக அங்கீகரித்துள்ளது.
இதுவொரு “வரலாற்று முக்கியமான முன்னேற்றம்” என வருணித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, ட்ரம்ப் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு நன்றித் தெரிவித்தார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அபாஸும் இந்த போர்நிறுத்தத்தை வரவேற்று, இதை “வரலாற்று தருணம்” எனக் கூறி, நீண்ட நாளுக்கு இந்த அமைதி நிலைக்குமென நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வொப்பந்தத்தின் முதல் கட்டமாக இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவர்; அதே சமயம், இஸ்ரேலியப் படைகள் காசாவின் சில பகுதிகளிலிருந்து பின்வாங்கும்.
முக்கியமாக, உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளும் காசாவுக்கு அனுப்பப்பட உள்ளன.
வெள்ளை மாளிகை இப்படி ‘நம்பிக்கைக்குரிய’ அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் காசாவில் இன்னும் இஸ்ரேலியத் தாக்குதல் தொடருகின்றன; குறிப்பாக மேற்கு காசா பகுதியில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக பாலாஸ்தீன தகவல் மையம் கூறியது.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் – நெத்தன்யாஹு இடையிலான நெருங்கிய உறவுகள் மற்றும் கட்டார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுடனான உறவுகள் இந்த ஒப்பந்தத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இது ஒரு பெரிய முன்னேற்றம் என்றாலும், இது அமைதி ஒப்பந்தம் அல்ல, ஒரு தற்காலிக போர்நிறுத்தம் மட்டுமே, என்ற எச்சரிக்கையையும் அவர்கள் விடுக்கவே செய்கின்றனர்.