
கோலாலம்பூர், நவம்பர்-9,
புதிய பீட்சா பொட்டலங்களில் முருகக் கடவுளின் படம் இடம்பெற்றிருப்பதை அடுத்து, மலேசிய இந்து தர்ம மாமன்றம், US Pizza Malaysia நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பீட்சா பொட்டலங்கள் அசைவ உணவுகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதால், இறைச்சி போன்ற பொருட்களுடன் முருகன் படத்தை இணைப்பது மிகவும் அவமதிப்பானது என அது கண்டித்தது.
தவிர, பீட்சா சாப்பிட்டப் பிறகு அப்பொட்டலங்கள் குப்பைக்கே செல்கின்றன; இதனால் புனித தெய்வ படத்தை கழிவாக பார்க்கும் நிலை ஏற்படுகிறது.
இது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்த அம்மன்றம், 3 முக்கியக் கோரிக்கைகளையும் வலியுறுத்துகிறது.
முருகத் திருவுருவம் பொறிக்கப்பட்ட பீட்சா பொட்டல தயாரிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு, அந்த பாக்ஸ் வடிவமைப்பை திரும்ப பெறுதல், இந்துக்களிடம் நிபந்தனையில்லா பகிரங்க மன்னிப்புக் கேட்டல், இது போன்று மீண்டும் நடக்கா வண்ணம் மத-கலாச்சார ஆலோசனை குழுவை அமைத்தல் ஆகியவையே அக்கோரிக்கைகளாகும்.
மேற்கண்டவற்றை உடனடியாக மேற்கொள்ள US Pizza-வை மாமன்றம் வலியுறுத்தியது.



