
கோலாலாம்பூர், ஜூலை10 – மூஸ்லீம் அல்லாத வயது குறைந்த குழந்தைகளை இரகசியமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவதை ஊக்குவிக்கும் சமய சொற்பொழிவாளர் பிர்டாவுஸ் வோங்கின் வீடியோ, அரசியலமைப்புச்
சட்டத்திற்கு எதிரானது என கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, அவ்வீடியோவை நிரந்தரமாக நீக்குமாறும், இனியும் அதனை இணையத்தில் பதிவேற்றவோ அல்லது அது போன்ற கருத்துகளை வெளியிடவோ தடை விதிப்பதாகவும், நீதிபதி
அமர்ஜீட் சிங் உத்தரவிட்டார்.
அந்த மதபோதகர் மீது வழக்குத் தொடுத்த 8 முஸ்லீம் அல்லாத பெற்றோர்களுக்கு,
செலவுத் தொகையாக 10,000 ரிங்கிட்டை செலுத்துமாறும், பிர்டாவுஸ் வோங் பணிக்கப்பட்டார்.
இரகசியமாக இஸ்லாத்திற்கு மதம் மாற விரும்பும் சிறார்களின்
கோரிக்கைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒருவருக்கு தாம் அறிவுறுத்தும் வீடியோவை,பிர்டாவுஸ் வோங் கடந்தாண்டு ஜூன் மாதம் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அது வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்ப, அவருக்கு எதிராக ஏராளமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
இதையடுத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணையும் தொடங்கியது.
இந்நிலையில், பிர்டாவுஸ் மீது வழக்குத் தொடுத்த 8 பெற்றோர்களும், அவர் சட்டவிரோதமாக நடந்துகொண்டதாக நீதிமன்றம் அறிவிப்பதோடு, வீடியோவை நிரந்தரமாக நீக்கவும்,
எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்க அவரை கட்டாயப்படுத்தும் தடையுத்தரவையும் கோரியிருந்தனர்.