
கோலாலம்பூர், செப்டம்பர்-4 – மலேசியாவில் சட்டப்பூர்வமாக வியாபாரம் செய்ய, உள்ளூர்வாசிகளை திருமணம் செய்வதை வெளிநாட்டவர்கள் முக்கிய யுக்தியாகக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
1956 வணிகப் பதிவுச் சட்டத்தின் படி, மலேசியர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் மட்டுமே வணிகத்தை பதிவுச் செய்ய முடியும்.
ஆனால், வெளிநாட்டினர் ‘புத்திசாலித்தனமாக’ தங்கள் மலேசிய துணைவியர் பெயரில் நிறுவனம் தொடங்குவதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்கைச் செலவின அமைச்சான KPDN-னின் துணையமைச்சர் Datuk Dr Fuziah Salleh மேலவையில் கூறினார்.
இது உள்ளூர் வணிகர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், மலேசியத் துணைவியர் மூலமாக சட்டப்படி வியாபாரம் பதிவுச் செய்யப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
இன்றைய தேதி வரையில், வெளிநாட்டினரைத் திருமணம் செய்துள்ள மலேசியர்கள் இங்கே வணிகத்தைப் பதிவுச் செய்ய முடியாது என்ற எந்தத் தடை உத்தரவும், SSM எனப்படும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடமும் இல்லை என்றார் அவர்
இந்நிலையில், திருமணத்துக்கு பின் குறைந்தது 5 ஆண்டுகள் கழித்து மட்டுமே வெளிநாட்டு துணைவியர் பெயரில் வணிகம் பதிவுச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளும் தற்போது வந்துள்ளன.
ஆனால் அதனை அமல்படுத்துவது சவாலாக உள்ளது; காரணம் கைதுச் செய்வதற்கான அதிகாரம் குடிநுழைவுத் துறை மற்றும் உள்ளூராட்சிகளுக்கு மட்டுமே உண்டு; KPDN-னுக்கு இல்லை என Fuziah விளக்கினார்.