
ஷா ஆலாம், பிப்ரவரி-18 – அண்மையில் சிலாங்கூர், செத்தியா ஆலாமில் உள்ள பேரங்காடியில் துப்பாக்கிச் சூட்டை கிளப்பி தலைமறைவான ஆடவன், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
கிள்ளான், பூலாவ் கெத்தாமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 3 மணிக்கு அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
அவனிருக்குமிடத்தை கண்டுபிடித்து ஹோட்டல் அறையில் போலீஸ் சோதனை நடத்திய போது, சந்தேக நபர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.
பதிலுக்கு போலீஸும் சுட்டதில் 30 வயது அவ்வாடவன் அங்கேயே மரணமடைந்தான்.
தோட்டாக்கள் நிரப்பப்பட்ட 2 சுடும் ஆயுதங்களையும் சம்பவ இடத்தில் போலீஸார் கண்டெடுத்தனர்.
பூலாவ் கெத்தாமில் அவன் ஒளிந்திருந்தானா அல்லது அத்தீவு வழியாக நாட்டை விட்டு தப்பியோட திட்டமிட்டிருந்தானா என்பது தெரியவில்லை.
பிப்ரவரி 8-ஆம் தேதி செத்தியா ஆலாமில் உள்ள பேரங்காடியின் முதல் மாடியில், அந்த உள்ளூர் ஆடவன் திடீரென துப்பாக்கிச் சூட்டைக் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தினான்.
அதில் துப்புரவுப் பணியாளரான வங்காளதேசி காயமடைந்தார்.
பின்னர் அங்கிருந்த ஒரு காரை துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக நிறுத்தி அதிலேறிய சந்தேக நபர், நெடுஞ்சாலை பக்கமாக இறங்கி தலைமறைவானான்.