
ஷா ஆலாம், செப்டம்பர் 12 – கடந்த செவ்வாய்க்கிழமை ஷா ஆலாம் ஊராட்சி மன்ற அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஷா ஆலாம் செக்க்ஷேன் 13-இல் சுகாதாரமாற்ற முறையில் இயங்கி வந்த 6 உணவகங்கள் மூடப்பட்டன.
எண்ணெய் படிந்த சமையலறை தரைகள், சுத்தம் செய்யப்படாத உணவு கழிவுகள், அழுக்கு தரையில் அடுக்கப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்கள் போன்ற குற்றங்களின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒவ்வாத முறையில் வைக்கப்பட்டிருந்த உணவுகள், எண்ணெய் வடிகட்டி கருவிகள் (grease trap) நிறுவப்படாதது போன்ற குற்றங்களும் உள்ளடங்குமென்று ஷா ஆலாம் ஊராட்சி மன்றத்தின் (MBSA) நிறுவன மற்றும் பொது தொடர்புகள் இயக்குநர் முகமட் ஃபவ்சி அசீஸ் மாமோர் (Mohd Fauzi Aziz Maamor) தெரிவித்தார்.
ஆய்வு செய்யப்பட்ட 7 இடங்களில் 6 உணவகங்கள் சரியான வணிக அனுமதி இல்லாமல், மேலும் மலேசிய உணவு பாதுகாப்புத் தகவல் அமைப்பின் (FoSIM) கீழ் பதிவு செய்யப்படாமலும் செயல்பட்டன என்பதும் தெரியவந்தது.