
கோலாலம்பூர், ஏப்ரல்-9, ஃபிரான்சைஸ் எனப்படும் வணிக உரிம வர்த்தகத்தில் வெற்றிப் பெறும் அளவுக்கு இந்நாட்டில் ஏராளமான இந்தியத் தொழில்முனைவோர்கள் இருக்கின்றனர்.
ஆனால், அத்துறை குறித்த தகவல்கள் முறையாக அச்சமூகத்தைப் போய் சென்றடையவில்லை.
நாட்டில் பிரான்ச்சைஸ் தொழில்துறையை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ள Pernas நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தெங்கு மொஹமட் ஃபாட்லி தெங்கு ஹம்சா, வணக்கம் மலேசியாவுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அதனைத் தெரிவித்தார்.
பல்லின கலாச்சார, பண்பாடு, உணவு முறைகளைக் கொண்ட மலேசியச் சமூகத்தில் இந்த பிரான்ஸ் வணிகத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
எனவே தான், ஃபிரான்ச்சைஸ் வாய்ப்புகள் குறித்து இந்தியர்களுக்கு விளக்கமளிக்கும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், நிதி அமைச்சின் கீழ் கழகமயமாக்கப்பட்ட நிறுவனமான Pernas இறங்கியுள்ளது.
தொடக்கக் கட்டமாக, நாட்டின் முன்னணி மின்னியல் தமிழ் செய்தி ஊடகமான வணக்கம் மலேசியாவுடன் Pernas ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது.
வணக்கம் மலேசியா வாயிலாக Pernas வழங்கும் பயிற்சித் திட்டங்கள் குறித்த தகவல்கள் இந்தியச் சமூகத்தைச் சென்றடையுமென தெங்கு ஃபாட்லி நம்பிக்கைத் தெரிவித்தார்.
பிரான்ச்சைஸ் வணிகத்தில் ஆர்வமுள்ளோர், குறிப்பாக இந்தியத் தொழில்முனைவோர் எப்படி அதில் ஈடுபடலாமென்ற பயிற்சிகளை வழங்கவும் Pernas தயாராக உள்ளது.
குறைந்தபட்சம் 90 ரிங்கிட் விலையில் தொழில்முனைவோருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; இந்நிலையில் உரிய வழிகாட்டுதல்களையும் தமது தரப்பு வழங்குவதாக அவர் கூறினார்.
ஆர்வமுள்ளோர், Pernas-சின் அதிகாரப்பூர்வ இணையத் தளமான www.pernas.my சென்று மேற்கொண்டு தகவல்களைப் பெறலாம்.
அதே சமயம் Pernas வழங்கும் அடிப்படை ஃபிரான்ச்சைஸ் வணிகப் பயிற்சிகள் குறித்த தகவல்களுக்கு, https://franchiseinstitute.pernas.my/ என்ற இணையத் தளத்தை வலம் வரலாம்.
Business In Transformation (BIT) மற்றும் Xcelerator ஆகிய இரு பயிற்சித் திட்டங்களிலும், குறிப்பாக BIT திட்டத்தில் பங்கேற்க இந்தியத் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படுவதாகவும் தெங்கு ஃபாட்லி சொன்னார்.