
புத்ராஜெயா, பிப்ரவரி-1 – பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டத்தோ அஃப்லின் ஷௌகியுடன் (Datuk Afdlin Shauki) தொடர்புடையதாகக் கூறப்படும் கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL-லின் கொள்முதல் பிரச்சினைகள் குறித்த உள் விசாரணை, அடுத்த வாரம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரான நிர்வாகமும் வெளிப்படைத்தன்மையும் இருப்பதை உறுதிச் செய்வதே, அந்த உள் தணிக்கையின் நோக்கமாகும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா (Dr Zaliha Mustafa) கூறினார்.
குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; ஆனால் விரைவான விசாரணையைக் கோரினேன், அடுத்த வாரத்திற்குள் KL மேயரிடமிருந்து அறிக்கைக் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதை அஃப்லின் மறுத்தால், அது அவரது உரிமை; எந்த தவறும் இல்லை என்றால், எந்தப் பிரச்சினையும் இல்லை என Dr சாலிஹா கூறினார்.
ஒருவேளை முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்; சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவர் என அமைச்சர் மேலும் கூறினார்.
4 மில்லியன் ரிங்கிட் குத்தகைத் திட்டத்தை வழங்கியதில், ஆலோசக வாரிய உறுப்பினர் ஒருவர் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் குறித்து, செவ்வாயன்று, DBKL உள் விசாரணையைத் தொடங்கியது.
நாடறிந்த நகைச்சுவையாளரும் PKR கட்சியின் உறுப்பினருமான அஃப்லின், 2023 ஜூலையிலிருந்து DBKL-லின் ஆலோசக வாரிய உறுப்பினராக உள்ளார்.