
கோலாலம்பூர்,செப்டம்பர்-9 – அரசாங்கம் உருவாக்கத் திட்டமிட்டுள்ள அணு உலைகள் மற்றும் அதன் கழிவுகளைக் கொட்டும் தளங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் கிள்ளான் முன்னாள் நாடாளுமான்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ.
அதோடு, சூரிய ஆற்றலுடன் செலவுகளை ஒப்பிடுவது உட்பட முழுமையான சாதகப் பாதக ஆய்வும்,
உலை அகற்றுதல் மற்றும் நீண்டகால கழிவு மேலாண்மை குறித்தும் பொது மக்களுக்குவெளிப்படையாகத் தெரிவிக்கப்பட
வேண்டும் என்றும் மக்களின் நம்பிக்கையைப்பெற இது அவசியமெனவும் அவர் கூறினார்.
இதற்கு முன், துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் (Fadillah Yusof) , மலேசியா அடுத்த 10 ஆண்டுகளில் அணு ஆற்றலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
புதியத் தலைமுறை உலைகள் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழல் தரத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், அணு ஆற்றல் உண்மையிலேயே “சுத்தமானது”தானா என கேள்வி எழுப்பிய சார்ல்ஸ்
கதிரியக்கக்கழிவு, 1980-களின் புக்கிட் மேரா விபத்து, அண்மைய ஜோகூர் நிலநடுக்க அபாயங்கள்ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினார்.
அணு உலைகள் அதிக நீர் பயன்பாடு,மிகப்பெரிய செலவுகள், நீண்ட கால கட்டுமானம் ஆகியவற்றால் பாதிப்பை ஏற்படுத்தும்.
நியாயமான ஆற்றல் மாற்றத்தில் அணுசக்திக்கு எந்தப் பங்கும் இல்லை; இது பில்லியன் கணக்கான பொது நிதியை
வீணாக்குவதோடு, எதிர்கால சந்ததியினருக்கு கதிரியக்கக் கழிவுகளை உருவாக்குகிறது.
தவிர, 10 முதல்15 ஆண்டுகளுக்கு ஆற்றலையும் உருவாக்காது.
எனவே, அணு உலைகளுக்குப் பதிலாக, உடனடியாக சுத்தமான மின்சாரம் தரும் சூரிய ஆற்றலுக்கு கோடிக்கணக்கான முதலீடு செய்வதில் என்ன தவறு என சார்ல்ஸ் வினவியுள்ளார்.