
மலாக்கா, ஆகஸ்ட்-21 – மலாக்கா, குருபோங்கில் (Krubong) நாய் உயிரோடு தோலுரிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தருவோருக்கான சன்மானத் தொகை RM51,000 ரிங்கிட்டுக்கு உயர்ந்துள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ‘அக்கறையுள்ள’ ஒரு வர்த்தகர் அந்த சன்மானத் தொகைக்கு கூடுதலாக 30,000 ரிங்கிட்டை வழங்க முன்வந்துள்ளார்.
SAFM எனப்படும் கைவிடப்பட்ட விலங்குகளுக்கான மலேசியச் சங்கம் நேற்று நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அதனைத் தெரிவித்தது.
பொது மக்கள் மற்றும் மேலும் சில வர்த்தகர்கள் கொடுத்த நன்கொடை வாயிலாக தொடக்கத்தில் 21,000 ரிங்கிட் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்து.
விலங்குகள் மீதான சித்ரவதை சம்பவங்கள் குறித்து தைரியமாக முன்வந்து தகவல் கொடுக்க பொது மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சன்மானம் உயர்த்தப்பட்டதாக SAFM கூறியது.
Krubong தொழிற்பேட்டையில் ஒரு நாய் உயிருடன் பாதியாகத் தோலுரிக்கப்பட்டதாகக் கூறி முன்னதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.
உயிருடன் தோலுரிக்கப்பட்டதில் உடம்பிலும் கழுத்திலும் கடுமையான காயங்களுடன் அந்நாய் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால் காயங்கள் படுமோசமாக இருந்ததால், அந்நாய் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிப்பதைத் தடுக்க, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அது கருணைக் கொலைச் செய்யப்பட்டது.