Latestஉலகம்மலேசியா

அதிரிக்கும் பதற்றம்; சீனா மீது கூடுதலாக 50% வரியை விதித்த டிரம்ப்

வாஷிங்டன், ஏப்ரல்-8- அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 34 விழுக்காடு வரியை அறிவித்த 48 மணி நேரங்களில், பதிலடி வரியாக கூடுதலாக 50 விழுக்காட்டை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் அதிபர் டோனல்ட் டிரம்ப்.

இதையடுத்து அனைத்து சீனப் பொருட்களுக்குமான அமெரிக்காவின் வரி விகிதம் வரலாறு காணாத அளவுக்கு 84 விழுக்காட்டை எட்டியுள்ளது. உலக நாடுகளுக்கான குறைந்தபட்ச வரியான 10 விழுக்காட்டையும் இதில் சேர்த்தால் மொத்தம் 94 விழுக்காடாகும்.

அமெரிக்காவுக்கு பதிலடியாக விதித்த 34 விழுக்காட்டு வரியை 24 மணி நேரங்களுக்குள் பெய்ஜிங் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் அந்த 94 விழுக்காட்டு மொத்த வரி பாயுமென டிரம்ப் மிரட்டியுள்ளார்.

கூடுதல் வரி விதிப்பின் மூலம் காலங்காலமாக அமெரிக்காவை ‘வஞ்சித்து’ விட்டு இப்போது மீண்டும் அதனை உயர்த்தினால், நாங்களும் வேலையைக் காட்டுவோம் என கடும் சினத்தோடு அவர் சொன்னார்.

புதிய வரி தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனாவுக்கு இனியும் கரிசனம் இல்லை; அனைத்தும் நிறுத்தப்படும் என்றார் அவர். இவ்வேளையில் டிரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடிகளால் அமெரிக்க பங்குச் சந்தை ஆட்டம் கண்டது.

அதிகப்படியான வரிகளால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற கவலைகளால் தொடக்கத்தில் பங்குகள் சரிந்தன. எனினும், டிரம்ப் நிர்வாகம் சில மாதங்களுக்கு வரிகளை நிறுத்தி வைக்கக் கூடுமென்ற வதந்திகளால், ஒரு மணி நேரத்தில் மீண்டும் பங்குகளின் மதிப்பு உயர்ந்தன.

புதிய வரிகளை தடுத்து நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான அறிகுறிகளை வர்த்தகர்கள் தேடிய நிலையில், அவர்களின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உடைக்கும் வகையில் சீனா மீது கூடுதலாக 50% வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விகிதத்திலிருந்து டிரம்ப் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என வெள்ளை மாளிக்கை வட்டாரமும் உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!