அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணை; பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுதெர்ட்டே கைது

மணிலா, மார்ச் 11 – போதைப்பொருளுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் சுமார் 6000 பேர் மனிதாபிமானமில்லாமல் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமான ICC கைது ஆணை பிரப்பித்ததன் அடிப்படையில் 79 வயதான பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுதெர்ட்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை மணிலா இன்டர்போலுக்கு அதிகாரப்பூர்வமாக கைது ஆணை கிடைத்த நிலையில் ரோட்ரிகோ டுதெர்ட்டே தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, டுதெர்ட்டேவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கைது சட்டத்துக்கு புறம்பானது எனக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார் டுதெர்ட்டேவின் வழக்கறிஞர் சால்வடோர் பனேலோ.
டுதெர்ட்டேவின் உத்தரவின் பேரில் 2019-இல் பிலிப்பைன்ஸ், ICCயிலிருந்து வெளியானது, இருப்பினும் அதற்கு முன்பாக நடந்த குற்றச்சாட்டுகள் மீதான தண்டனைத் தீர்ப்பில், தங்களுக்குத் அதிகாரம் இருப்பதாக கூறிய ICC தற்போது இந்த கைது ஆணையை வெளியிட்டுள்ளது.அது பட்டியலிட்ட குற்றச்சாட்டுகளில், டுதெர்ட்டே Davao நகரின் மேயராக இருந்தபோது நடந்த கொலைகளும் அடங்கும்.
இந்நிலையில், இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள போதும், அங்கு தனக்கென பெரும் ஆதரவாளர்களைக் கொண்டுள்ள டுதெர்ட்டே வருகின்ற மே மாத இடைக்கால தேர்தலில், தாவாவோ நகரின் மேயராகவும் போட்டியிடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.