கூச்சிங், ஜனவரி-3, இரு மனங்கள் ஒன்று சேர்ந்தால் வயதெல்லாம் ஒரு பிரச்னையில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
அதுவும் ஓய்வு காலத்தை கழிக்கும் முதுமை வயதில்…
சரவாக்கில், Rumah Seri Kenangan Kuching இல்லத்தைச் சேர்ந்த 65 வயது Richard Wong, 80 வயது Molly Teo இருவர் தான் அந்த புதுமணத் தம்பதியர்.
அவர்களின் பதிவுத் திருமணம் சரவாக் தேசியப் பதிவுத் துறை அலுவலகத்தில், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சரவாக் மாநில பெண்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாத்திமா அப்துல்லா (Datuk Seri Fatimah Abdullah) சிறப்பு வருகைப் புரிந்து மணமக்களை வாழ்த்தினார்.
தங்களின் முந்தையைத் துணைகளை இழந்து தனிமையில் வாடிய இருவருக்கும், அவ்வில்லத்தில் நெருக்கமேற்பட்டு கடைசியில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இத்தனைக்கும் அங்கு ஆண்களும் பெண்களும் தனித்தனி புளோக்குகளில் தான் தங்குகின்றனர்.
ஆனால், பைபிள் அறிவும் பாடும் பொழுதுபோக்குமே தங்களை ஒன்றிணைத்ததாக, இருவரும் வெட்கத்துடன் கூறினர்.
மனநலப் பிரச்னை இல்லாதது, தொற்றுநோய் பாதிப்பு இல்லாதது, வாரிசு இல்லாதது ஆகிய நிபந்தனைகளை Richard-டும் Molly-யும் பூர்த்திச் செய்திருப்பதால், அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பது சுமூகமாக முடிந்துள்ளது.
மகிழ்ச்சியாக இருக்க வயது ஒரு தடையல்ல; தனிமையில் வாடி மனஉளைச்சலுக்கு ஆளாவதைத் தவிர்க்க, முதியோருக்கும் துணையிருப்பது நல்லதே என அமைச்சர் ஃபாத்திமா சொன்னார்.