
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – பிரதமர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை விலகச் சொல்லும் முன்னர், மாற்று அரசாங்கமாக தாங்கள் எந்த வகையில் சிறப்பாக செயல்படுவோம் என்பதை PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் அறிவிக்க வேண்டும்.
மக்கள் பிரச்னையையும் எப்படித் தீர்க்கப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என, PSM கட்சியின் தலைவர் Dr ஜெயக்குமார் தேவராஜ் கூறினார்.
விலைவாசி உயர்வு, இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம், ஓய்வூதியம் பெறுவோர் மத்தியில் வறுமை, அரசாங்க மருத்துவமனைகளில் நிபுணர்களுக்குப் பற்றாக்குறை, சமூக நல நடவடிக்கைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை போன்றவையே மலேசியர்கள் தற்போது எதிர்நோக்கும் முக்கியப் பிரச்னைகளாகும் என்றார் அவர்.
இவ்வேளையில், இனப் பதட்டங்களையும் சமூகப் பிரிவினையையும் மோசமாக்கும் இன விவகாரங்களைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை மோசமாக சித்தரிப்பதாக, பெரிக்காத்தான், பக்காத்தான் ஹராப்பான் இரண்டையும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
மலாய் முஸ்லீம்களுக்கு DAP ஆபத்தானது என பாஸ் – பெர்சாத்து கட்சிகள் பயமுறுத்துகின்றன.
அதே சமயம் பெரிக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் மலாய்க்காரர் அல்லாதோரின்
உரிமைகளும் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்படும் என பக்காத்தானும் தன் பங்கிற்கு பிரச்சாரம் செய்கிறது.
இது மேலும் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறது.
எனவே அரசியல்வாதிகள் உண்மையில் யதார்த்த அடிப்படையிலான பகுப்பாய்வை வழங்கவும், மலேசியாவின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒத்துழைக்கவும் அவர் வலியுறுத்தினார்.
இரு முறை சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார், அறிக்கை வாயிலாக இதனைத் தெரிவித்தார்.
கடந்த மாதம் முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினுடன் சந்திப்பு நடத்தியப் பிறகு, பெரிக்காத்தானிலோ அல்லது வேறு கூட்டணியிலோ இணையப் போவதாக வெளியான தகவலை, PSM முன்னதாக மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.