
அலோ காஜா, ஜூலை-29- மலாக்கா, அலோர் காஜாவில் இரகளையில் ஈடுபட்டதன் பேரில் kapcai மோட்டார் சைக்கிளோட்டிகளான இரு கும்பல்களைச் சேர்ந்த 23 பேர் கைதாகினர்.
நேற்று முன்தினம் Bulatan Kancil _roundabout _ அருகே அச்சம்பவம் நிகழ்ந்தது.
மலாக்கா மாநகர் மன்ற அமுலாக்கப் பிரிவு அபராதம் விதித்ததால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தவே அவர்கள் அந்த அட்டகாசத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
முதல் சம்பவத்தில், கோலாலம்பூர் மற்றும் மலாக்காவிலிருந்து வந்திருந்த 9 பெண்கள் உட்பட 18 பேர், Banda Hilir-ரில் CFZ எனப்படும் வாகனமில்லா பகுதிக்குள் நுழைந்து, Stadthuys கட்டடத்திற்கு முன்பே அவற்றை நிறுத்தி வைத்தனர்.
அவ்விடத்தை விட்டு நகருமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறியதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சினமடைந்து அபராத நோட்டீஸை கிழித்துப் போட்டதோடு, அமுலாக்க அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் அக்கும்பல் திட்டியது.
இதைப் பார்த்த உள்ளூர் மோட்டார் சைக்கிளோட்டிகள் சிலர் கோபமடைந்து சண்டைக்குப் போயினர்.
அந்தக் கலவரத்தில் இரண்டாம் கும்பலைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளோட்டி ஹெல்மட் மற்றும் padlock இரும்பினால் தாக்கப்பட்டு, காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையடுத்தே, 20 முதல் 30 வயதிலான சந்தேக நபர்கள் கைதாகினர்.
அவர்களில் 22 பேர் போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டனர்; ஆயுதத்தால் தாக்கியதற்காக இன்னொருவர் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.