அப்பர் தமிழ்ப்பள்ளியின் பட்டமளிப்பு விழா மாணவர்களின் கல்விக்கு ஊக்குவிப்பாக அமையும் – டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர், டிச 16 – கோலாலம்பூர் அப்பர் தமிழ்ப் பள்ளியில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பாலர் பள்ளி மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக பட்டமளிப்பு விழா அம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் ஊக்குவிப்பாக இருக்கும் என கோலாலம்பூர் ஸ்ரீ மாக மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ ந.சிவக்குமார் தெரிவித்தார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் ஆதரவுடன் மாநகரின் மத்தியில் இருக்கும் வரலாற்று பெருமைவாய்ந்த அப்பர் தமிழ்ப்பள்ளியில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும் தங்களது கல்விப் பயணத்தில் மாணவர்களுக்கு நல்லதொரு தொடக்கமாக அவர்களுக்காக பட்டமளிப்பு விழா விளங்குவதாக சிவக்குமார் தெரிவித்தார்.
அப்பர் தமிழ்ப் பள்ளி தொடர்ந்து கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கையிலும் நல்ல மேம்பாடு காண்பதற்கு பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளியின் மேலாளர் வாரியம் ஆகிய தரப்புகளுக்கிடையே தொடர்ந்து ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பரிசளிப்பு விழாவில் சிந்தனையைத் தூண்டும் மாணவர் ஓவிய நிகழ்ச்சி உண்மையிலேயே மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இதில் இடம்பெற்றிருந்த படைப்புக்கள் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை மாணவர்களின் வாழ்க்கையின் பரிணாமத்தை சித்தரித்துள்ளது.
நவீன தொடர்பு சாதனங்களின் துணையோடு அமைந்த இதன் படைப்புகள் மாணவர்களை கவரும் என்பதோடு இன்றைய இளைய தலைமுறையின் வளர்ச்சியை வடிவமைத்து முக்கியமான பாடங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் களமாகவும் இருந்தது உண்மையிலேயே பாரட்டப்பட வேண்டிய ஒன்று என அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் இந்த பள்ளியின் அடைவு நிலையில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கையிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் சிவக்குமார் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.



