Latestமலேசியா

புத்ரா ஹைட்ஸ் வடகார பத்ர காளியம்மன் ஆலய நிலப்பட்டா தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதா?

ஷா அலாம், நவ 7 – ஷா அலாம் சீபில்ட் ஆலயத்திற்கு அருகே புத்ரா ஹைட்ஸில் 100 ஆண்டுகளுக்கு மேலான ஸ்ரீ வட கரா பத்ர காளியம்மன் ஆலயத்தின் நிலப்பட்டா தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால் அந்த ஆலயத்தின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. ஆலயத்தின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படாமலேயே அதன் நிலப்பட்டா மாற்றப்பட்டதை ஆட்சேபித்து இன்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட நில அலுவலகத்தில் மகஜர் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகம் மற்றும் அதன் ஆலோசகர் அருண் துரைசாமி வழங்கிய மகஜரை பெட்டாலிங் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகத்தின் உதவி அதிகாரி நூருன்னஜ்மி அமாத் ஜான்ஜி (Nurunnajmi Amat Janji) பெற்றுக் கொண்டார்.

இந்த விவகாரத்திற்கு அவர்களிடமிருந்து திருப்திகரமான பதில் மற்றும் இணக்கமான தீர்வு இல்லை என்றால், இப்பிரச்னையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யிடம் கொண்டு செல்வோம் என அருண் தெரிவித்தார். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு Concrete Gold Sdn Bhd நிறுவனத்துடன் இணக்கம் காணப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அடுத்த ஆண்டு குப்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில் ஆலயத்தின் நிலப்பட்டாவை ரகசியமாகவும் அவசரமாகவும் மாற்றியதற்கான காரணம் என்ன என்று ஆலய நிர்வாகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ஆலயத்தின் நிலத்தை காலி செய்யும்படி இவ்வாண்டு பிப்ரவரி மாதம் Sasa Mewah Sdh Bhd மேம்பாட்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு மனு தங்களுக்கு கிடைத்த பின்னரே இந்த விவகாரத்தை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளானோம் என அருண் துரைசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிலத்தை மேம்படுத்தும் திட்டம் எதுவும் Sasa Mewah மேம்பாட்டு நிறுவனத்திடம் இல்லையென ஸ்ரீ வடக்கரா பத்ர காளியம்மன் பக்தர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் எம். மோகன சுந்தர் கூறினார். புதிய நில உரிமையாளர் எங்களுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல் எதுவும் நடத்தவோ அல்லது பேச்சு நடத்தவும் இல்லை. நிலத்தின் உரிமையாளர் பிரச்சனை இன்னும் தீர்க்கபடாத நிலையில் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம் எப்படி நிலத்தை மாற்றுவதற்கு அனுமதிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!