
கோலாலம்பூர், மார்ச்-23 – உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் அளவுக்கு கோழி முட்டைகளின் கையிருப்பு சீராக இருப்பதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கோழி முட்டைகளின் விலை திடீரென உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு கோழி முட்டைகள் கடத்தப்படலாம் என ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
இதனால் எழும் குழப்பத்தைத் தணிக்கும் வகையில் அமைச்சர் அவ்வுத்தரவாதத்தை வழங்கினார்.
அமைச்சு மற்றும் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு, தினசரி முட்டை உற்பத்தி நிலையான மற்றும் திருப்திகரமான அளவில் இருப்பதை உறுதிச் செய்துள்ளதாக, அறிக்கை வாயிலாக மாட் சாபு சொன்னார்.
கையிருப்பு நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்காக, அமைச்சு, பண்ணை மட்டத்திலிருந்து கடைசிப் பயனர் வரை கோழி முட்டைகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களின் ஏற்றுமதியைக் கண்காணிக்க பிற நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுடன் வியூக ஒத்துழைப்பு மூலம் அமலாக்க நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டு வருவதாக மாட் சாபு கூறினார்.
எனவே முட்டைக் கையிருப்புக் குறித்து வெளியாகும் உறுதிச் செய்யப்படாத தகவல்களை பொது மக்கள் எளிதில் நம்பக் கூடாது; அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கிடைக்கும் தகவல்களை மட்டுமே நாடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்காவில் கோழி முட்டைகள் விநியோகப் பற்றாக்குறையால் முட்டைகளின் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, கோழி முட்டைகள் அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியான.