வாஷிங்டன், ஜனவரி-23, கள்ளக்குடியேறிகளை முறியடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தும் வகையில், மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1,500 இராணுவ வீரர்களை அனுப்புமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களில் 1,100 பேர் தரைப்படையினர்; 500 பேர் கடற்படையினர் ஆவர்.
அந்தக் கடற்படையினர் உண்மையில் கலிஃபோர்னியா காட்டுத் தீயை அணைக்கும் பணிகளுக்கு உதவ அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்களின் சேவை தற்போதைக்கு அங்குத் தேவைப்படாததால், எல்லைப் பாதுகாப்புப் பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 4,000 பேராக உயரவுள்ளது.
அடுத்த 24 முதல் 48 மணி நேரங்களில் அவர்கள் பணியைத் தொடங்குவர் என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார்.
இந்த இரண்டாவது தவணையில் டிரம்ப் முன்னுரிமையளிக்கும் விஷயங்களில் எல்லைப் பாதுகாப்பு முக்கியமானதாகும்.
பதவியேற்ற முதல் நாளிலேயே மெக்ஸிகோவுடனான அமெரிக்க எல்லையில் அவர் தேசிய அவசரநிலையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லைப் பாதுகாப்பைக் கடுமையாக்குவதும், அமெரிக்காவிலிருந்து கள்ளக்குடியேறிகளைத் துரத்துவதும் தமது தலையாயக் கடமையாக இருக்குமென அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் கூறி வந்த டிரம்ப், சொல்லியடியே பதவிக்கு வந்த கையோடு அவற்றை நடைமுறைப்படுத்தி அதிர வைத்துள்ளார்.